மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
x

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிறப்பு முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாமை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்தியது. முகாமை பிரபாகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 150 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களை மனநல மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், ஆர்.பி.எஸ்.கே. மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்தனர். இதில் 28 பேர் உதவி உபகரணங்களுக்காகவும், 4 பேர் அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். தகுதியுடைய 12 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 4 பேருக்கு தேசிய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.முன்னதாக இந்த முகாமில் பணிபுரிய அரசு டாக்டர்களுக்கு முறையாக பணி ஒதுக்கப்படாததால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக முகாம் தொடங்கியது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.மேலும் பிறப்பு முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஆலத்தூர் தாலுகாவிற்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் தாலுகாவிற்கு வருகிற 7-ந் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு வருகிற 10-ந் தேதி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.


Next Story