தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் 13 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் 13 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னலை வகித்தனர்.

முகாமில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

13 இடங்களில் ஏற்பாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், இந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்கள் மற்றும் மாநகராட்சி என 13 இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

முகாமில் எலும்புமுறிவு, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 5 சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். முகாமுக்கு அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களையும் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முகாமில் மாற்றுத்திறனாளிகளின் குறைபாடு சதவீதம் கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு தேவையான பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

கடற்கரை செல்ல...

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்துநகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று கால்களை நனைத்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.. மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை கண்டறிந்து அதனை வளர்த்தால் சமூகத்தில் அவர்கள் சிறந்த மாணவ, மாணவியாக வருவார்கள். அனைத்து மாற்றுத்திறனாளிகளாலும் சாதிக்க முடியும். சமூகம் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி அவர்கள் சாதிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அதற்கான பணிகளைத்தான் முதல்-அமைச்சர் செய்து வருகிறார்' என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாற்று திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story