மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மத்திய அரசின் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்காக மாணவ-மாணவிகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
மத்திய அரசின் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மற்றும் பாடத்திட்டத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்ததோடு, மாணவ-மாணவிகளுக்கான பயிற்சி கையேட்டையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவராவ், நான் முதல்வன் போட்டி தேர்வுப் பிரிவின் சிறப்பு திட்ட இயக்குனர் சி.சுதாகரன், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
என்னதான் நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றாலும், அரசு அலுவலகங்கள் குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களில் பணியில் இருப்போரின் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகின்றது.
ஒரு காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வந்தால் 25 முதல் 30 சதவீதம் வரை நம்முடைய தமிழ்நாட்டு தேர்வர்கள் வெல்வார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை. மாறிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், மத்திய அரசு அலுவலகங்களிலும் ஆண்டுக்காண்டு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
பல குக்கிராமங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இந்தி உள்ளிட்ட வேறு மொழி பேசுபவர்களே அதிக அளவில் மேலாளர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் இங்கிருக்கக்கூடிய நம்முடைய பாமர மக்கள் வயதான குடிமக்கள், வங்கி சேவைகள் பெறுவதில் கொஞ்சம் சிரமப்படுகிறார்கள்.
கூடுதல் பயிற்சி மையங்கள்
மொழி ஒரு தடையாக இருப்பதால் அரசு சேவை சென்றடைவதில் ஒரு தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களும், அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடுதான் இதனை நான் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி தொடங்கி வைத்தேன்.
இந்தப் பிரிவு தொடங்கி வைக்கப்பட்ட 3 மாதங்களில் இன்றைக்கு 29 ஆயிரத்து 24 விண்ணப்பங்கள் வந்துள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண், பட்டப்படிப்பில் பெற்றுள்ள சதவீதம் மற்றும் இடஒதுக்கீட்டு முறையில் 6 ஆயிரத்து 900 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதனால் கூடுதல் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளன.
குறிப்பாக சென்னையில் மட்டுமே 3,042 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதில் இருந்து 450 பேரை தேர்வு செய்து, சென்னை மாவட்டத்தில் மட்டும் 3 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. அதில் ஒரு தேர்வு மையம்தான் தற்போது நாம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தொடங்கி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.