இந்திய கடலோர காவல்படை, கப்பற்படையில் சேர இலவச பயிற்சி வகுப்புவிழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்


இந்திய கடலோர காவல்படை, கப்பற்படையில் சேர இலவச பயிற்சி வகுப்புவிழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கடலோர காவல்படை, கப்பற்படையில் சேர இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் சேர விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த மீனவர் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம்


தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 14.3.2022 முதல் 14.6.2022 வரை நடத்தி முடிக்கப்பட்டது. 2-வது அணிக்கான 90 நாட்கள் பயிற்சி வகுப்பு இவ்வாண்டில் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கலாம்

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்புக்குழும ஆய்வாளர் அலுவலகங்களில் இருந்தும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள் ஆகிய இடங்களிலிருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் https://drive.google.com/drive/folders /1I8xcdsoXM9RHO ySMT2w JCoEXtWskh?usp=sharing என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிக்கால ஊக்கத்தொகை

இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.ஆயிரம் வீதம் பயிற்சிக்கால ஊக்கத்தொகையும் வழங்கப்படும். எனவே பிளஸ்-2 வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம், இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த தகவலை கடலோர காவல்படை கூடுதல் இயக்குனர் சந்திப்மிட்டல் தெரிவித்துள்ளார்.


Next Story