கொடுமுடி அருகே 101 வயதான சுதந்திர போராட்ட வீரர் தியாகி கே.கே.முத்துசாமி மரணம்; வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்
கொடுமுடி அருகே 101 வயதான சுதந்திர போராட்ட வீரர் தியாகி கே.கே.முத்துசாமி மரணம் அடைந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
கொடுமுடி
கொடுமுடி அருகே 101 வயதான சுதந்திர போராட்ட வீரர் தியாகி கே.கே.முத்துசாமி மரணம் அடைந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.
சுதந்திர போராட்ட வீரர்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தியாகி கே.கே.முத்துசாமி. சுதந்திர போராட்ட வீரரான இவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 101.
கருக்கம்பாளையத்தை சேர்ந்த தியாகி கே.கே.முத்துசாமி, சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 1942-ம் ஆண்டு காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். நாடு முழுவதும் அந்த போராட்டம் சுதந்திர தாகம் மிக்க போராட்ட வீரர்களை களத்தில் கடுமையாக போராட தூண்டியது. இந்த போராட்டம் ஈரோடு மாவட்ட (பழைய கோவை) பகுதிகளில் கொளுந்து விட்டு எரிந்தது. காந்தியடிகளால் கவரப்பட்ட கே.கே.முத்துசாமி, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றார். ஆகஸ்டு புரட்சி என்று அழைக்கப்படும் இந்த போராட்டம் 1942-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி அன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற முத்துசாமி கொடுமுடி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதற்காக ஆங்கிலேய அரசின் போலீசாரால் முத்துசாமி கைது செய்யப்பட்டார். அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போதைய ஆந்திர மாநிலம் அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
குடும்பம்
சுதந்திரத்துக்கு பின்னர் சோசலிஸ்டு கட்சியில் இணைந்து அரசியல் பணியும் சமூக பணியும் ஆற்றினார். கட்சியின் மாவட்ட தலைவராக விளங்கினார். பின்னர் அரசியல் வாழ்வில் இருந்து விலகி, குப்பம்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து, அங்கேயே வசித்து வந்தார்.
தியாகி முத்துசாமிக்கு காளியம்மாள் (வயது 97) என்ற மனைவியும் காந்தி, ஜோதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி பேரன் -பேத்திகள் உள்ளனர்.
மரணம்
மனைவி காளியம்மாளுடன் குப்பம்பாளையம் தோட்டத்தில் வசித்து வந்த முத்துசாமிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 5 மணி அளவில் தியாகி கே.கே.முத்துசாமி மரணம் அடைந்தார். அவரது உடல் குப்பம்பாளையம் வீட்டில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. அவரது மரண தகவல் அறிந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மொடக்குறிச்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் நிர்வாகியுமான ஆர்.எம்.பழனிச்சாமி தகவல் அறிந்ததும் தியாகியின் வீட்டுக்கு நேரடியாக சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இறுதிச்சடங்கு முடியும்வரை அங்கேயே இருந்தார்.
மொடக்குறிச்சி தொகுதி டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. நேரில் வந்து தியாகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி மற்றும் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று மாலை அவரது தோட்டத்தில், நடமாடும் எரிவாயு மயானம் மூலம் உடல் எரியூட்டப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
மறைந்த சுதந்திர போராட்ட வீரர், தியாகி முத்துசாமிக்கு கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று வருவாய் துறை சார்பில் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு நேரில் சென்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.