சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி
தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி நடந்தது
சென்னை மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் தென்காசி இ.சி.ஈ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது.
இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், இந்திய அஞ்சல் துறை, மாவட்ட சித்த மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், இந்திய தர நிர்ணய அமைவனம் ஆகியவற்றின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிக்கு சென்னை மத்திய மக்கள் தொடர்பகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மத்திய மக்கள் தொடர்பகம் மண்டலக இயக்குனர் ஜெ.காமராஜ், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினர். மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் ஜூனி ஜேக்கப் வரவேற்று பேசினார். இந்த கண்காட்சி நேற்று முதல் 22-ம்தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன், பூலித்தேவர், உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் நகர்மன்ற கவுன்சிலர் வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.