அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு
நாகையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
நாகையில் அடிக்கடி ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மின்வெட்டு
மனிதர்களுக்கு மூச்சுக்காற்று எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல தற்போது மின்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. செல்போன் சார்ஜ் முதல் கார் வரை மின்சாரத்தின் தேவை இன்றியமையாததாக மாறிவிட்டது. மின்சாரம் இல்லை என்றால், எதுவும் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.
நாகையில் கடந்த ஓரிரு நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் இருந்த இந்த மின்வெட்டு பிரச்சினை தற்போது நகர் பகுதிகளிலும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.
இல்லத்தரசிகள் சிரமம்
நாகை வெளிப்பாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் நேற்று காலை முதல் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் காலை சமையல் செய்வதற்கு இல்லத்தரசிகள் சிரமத்தை சந்தித்தனர்.
மின்வெட்டால் மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியாத நிலையில், காலை உணவுக்கு சட்னி, சாம்பார் செய்ய முடியாமல் இல்லத்தரசிகள் தவித்து வந்தனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களும், தொழிலாளர்களும் காலை உணவை தவிர்க்கும் நிலை ஏற்பட்டது.
குறைந்த மின்னழுத்தம்
மேலும் அவ்வப்போது ஏற்படும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் இருக்கும் மின்சாதன பொருட்களும் பழுதாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூக்கமின்றி தவித்து வருகின்றனர். கொசுக்கடியில், தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.