மலைச்சரிவுகளில் புதிய நீர்வீழ்ச்சிகள்
நீலகிரியில் தொடர் மழையால் மலைச்சரிவுகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரியில் தொடர் மழையால் மலைச்சரிவுகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
தொடர் மழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு தாமதமாக பெய்ய தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக பருவமழை தீவிரம் அடைந்து கனமழையாக பெய்து வருகிறது. இந்தநிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக நீலகிரியில் மழை பெய்து வந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அத்துடன் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். தொடர் மழை காரணமாக ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மலைச்சரிவுகள் மற்றும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. வெள்ளியை உருக்கியதை போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குன்னூர் லாஸ் நீர்வீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மண் சரிவு
இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். தொடர் மழையால் சில இடங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் தேயிலை தோட்டங்களில் பச்சை மகசூல் அதிகரித்து உள்ளது. பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் பொன்னானி, சேரம்பாடி, சோலாடி, விலக்கலாடி ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் பலத்த மழை பெய்தது. சேரம்பாடி அருகே லெனின் நகரில் ராமசாமி என்பவரது வீட்டையொட்டி மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிந்து அருகே உள்ள வீட்டு பின்புறம் விழுந்தது. தொடர் மழையால் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் அபிராமி மற்றும் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தினர் நேரில் பார்வையிட்டனர்.