தூத்துக்குடியில்வெள்ளிக்கிழமைபுத்தகத்திருவிழா தொடக்கம்
தூத்துக்குடியில்வெள்ளிக்கிழமை புத்தகத்திருவிழா தொடங்குகிறது.
தூத்துக்குடியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) புத்தகத்திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழா 11 நாட்கள் நடக்கிறது.
ஆய்வு
தூத்துக்குடியில் 4-வது புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 01-05-23 வரை நடக்கிறது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரின் நேர்முக உதவியாளர் பீவி ஜான், அலுவலக மேலாளர் பொற்செல்வம், செயற்பொறியாளர் அமலா, மோகன்பாபு மற்றும் அலுவலகர்கள் உடன் இருந்தனர்.
புத்தக திருவிழா
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4-வது புத்தகத் திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 01.05.2023 வரை 11 நாட்கள் நடக்கிறது. புத்தகத் திருவிழாவுடன் சேர்ந்து வருகிற 28-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழாவும் நடக்கிறது. கலைத் திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய தொல்லியல் இடங்கள் அமைந்து உள்ளன. எனவே நமது மாவட்டத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து மிகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
அந்த அரங்கத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது என்பது குறித்து மாதிரிள் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கு விடுமுறை வருவதால் அனைத்து பெற்றோரும் அவர்களை அழைத்து வரவேண்டும். புத்தகத் திருவிழாவில் சான்றோர்கள் உரையாற்ற உள்ளார்கள்.
சிறப்பு பஸ்கள்
புத்தகத் திருவிழாவுக்கு வந்து செல்வதற்கு வசதியாக புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. புத்தகத் திருவிழாவையொட்டி எட்டயபுரம் மகாகவிபாரதியார் மணிமண்டபம், கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம், திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் மணிமண்டபம் ஆகிய 3 இடங்களில் ஏப்ரல் 21, 22, 23 மற்றும் 28, 29, 30 ஆகிய (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை) நாட்களில் புத்தகத் திருவிழா குறித்து பதாகைகள் வைக்கப்பட உள்ளது. மேலும், கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் கரிசல் இலக்கியங்கள் குறித்தும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்டம் தொடர்பானபடைப்புகள் குறித்தும், திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் மணிமண்டபத்தில், சுதந்திரப் போராட்டத்தில் 4-வது தூணான ஊடகத்துறையின் பங்களிப்பு தொடர்பாகவும் கருத்தரங்கங்கள் நடக்கிறது. புத்தகத் திருவிழாவுக்குஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வருகை தந்து புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதிகளவில் புத்தகங்கள் வாங்கி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.