திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா 4-ம் நாளான வெள்ளிக்கிழமைசுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா 4-ம் நாளான வெள்ளிக்கிழமைசுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார்.
கந்தசஷ்டி திருவிழா
முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் தங்கி விரதம் கடைபிடித்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனையும், சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
சுவாமி எழுந்தருளள்
4-ம் திருநாளான நேற்று மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளினர் அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
நாளை சூரசம்ஹாரம்
6-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடக்கிறது.
திருக்கல்யாணம்
7-ம் திருநாளான நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் மற்ற காலங்கள் தொடர்ந்து நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருள்கிறார். மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடக்கிறது.
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினசரி கோவில் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.