குவைத்தில் இறந்தவரின் உடலை மீட்டுத்தரக்கோரி நண்பர்கள் மனு
குவைத்தில் இறந்தவரின் உடலை மீட்டுத்தரக்கோரி நண்பர்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியுள்ளனர்.
திண்டுக்கல்லை அடுத்த கொசவபட்டியை சேர்ந்தவர் யாகப்பன். விவசாயி. இவருடைய மகன் ஜான் பவுல். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் உள்ள உணவு விற்பனை நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அவர் சாலை விபத்தில் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பதறிப்போன பெற்றோர் மகனின் உடலை மீட்டுத்தரக்கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் மனு கொடுத்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் ஜான் பவுலுடன் கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்கள் 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' பிரிவுக்கும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் இணையதளம் மூலம் ஒரு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் மகனை இழந்து வாடும் ஏழை விவசாயியின் மகனும் எங்கள் நண்பனுமான ஜான் பவுல் குவைத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.