பொரி தயாரிக்கும் பணி மும்முரம்


பொரி தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)

ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பொரி தயாரிக்கும் பணி

தென் தமிழகத்தில் பொரி தயாரிப்பில் சிங்கம்புணரிக்கு பெரும் பங்கு உண்டு. இப்பகுதியில் தயாராகும் பொரி இனிப்பு கலந்த சுவையோடு மொறு மொறு தன்மையுடன் இருப்பதால் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இவை சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பொரி தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு பெருமளவில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக இரண்டு ஷிப்ட் முறைகளில் சிங்கம்புணரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இயற்கை முறையில்

இதுகுறித்து பொரி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மகேஸ்வரன் கூறுகையில், நெல் கொள்முதலில் இருந்து 7 நாட்கள் நெல்பொரியாக பொரிக்கப்படுகிறது. சரியான நெல் தேர்வு செய்து அதில் சீனி மற்றும் உப்பு கலந்து தண்ணீரில் ஊறவைத்து சுமார் 3 மணி நேரம் சரியான தட்பவெப்ப நிலையில் உலர வேண்டும். உலர்த்திய பிறகு உலர்ந்த நெல்லை எடுத்து பொரி தயாரிக்கும் எந்திரத்தில் கொட்டி சிறிது சிறிதாக அது பொரியாக நெருப்பில் வெந்து எந்திரம் மூலம் வெளியாகிறது.

விறகு மற்றும் தென்னை மட்டைகளை கொண்டு தீமூட்டி இயற்கை முறையில் பொரி தயாரிக்கப்படுகிறது. நெல் விலை ஏற்றத்தால் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்பட்ட நெல்களை பயன்படுத்தி பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.



Next Story