11-ந் தேதி முதல்- அமைச்சர் திறக்க இருக்கும் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்-மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது
வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ள சேலம் ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைத்து மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவசர கூட்டம்
சேலம் மாநகராட்சியின் அவசர கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமார், துணைமேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
34-வது வார்டு ஈசன் இளங்கோ:- சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஈரடுக்கு பஸ் நிலையம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும்.
26-வது வார்டு கலையமுதன்:- வருகிற 11, 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார். ஈரடுக்கு பஸ் நிலையம் மற்றும் அண்ணா பூங்காவில் உள்ள கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைப்பதுடன் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அப்போது சேலம் 4 ரோடு அருகே முதல் அண்ணா பூங்கா வரை கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த 100 புகைப்படங்களை மாநகராட்சி சார்பில் வைக்க வேண்டும். சீரமைக்கப்பட்ட பள்ளப்பட்டி ஏரிக்கு கருணாநிதி பசுமை பூங்கா என பெயர் சூட்ட வேண்டும்.
தீர்மானம் நிறைவேற்றம்
காங்கிரசை சேர்ந்த துணை மேயர் சாரதா தேவி:- நேரு கலையரங்கத்திற்கு ஏற்கனவே உள்ள நேரு என்ற பெயர் இருக்குமா? அல்லது நீக்கப்படுமா?, அல்லது அவரது பெயருக்கு முன்னால் கருணாநிதியின் பெயர் இடம்பெறுமா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கு அதிகாரிகள் பதில் அளித்து கூறும் போது, நேருவின் பெயருக்கு முன்னால் கருணாநிதியின் பெயர் இடம்பெறும் என்றனர்.
இதையடுத்து ஆளுங்கட்சி தலைவர் ஜெயக்குமார் எழுந்து நின்று ஈரடுக்கு பஸ் நிலையம், நேரு கலையரங்கம், போஸ் மைதானம் ஆகியவற்றுக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை வாசித்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது கவுன்சிலர்கள் மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அ.தி.மு.க. புறக்கணிப்பு
இதனிடையே ஈரடுக்கு பஸ் நிலையம், நேரு கலையரங்கம், போஸ் மைதானம் ஆகியவற்றுக்கு கருணாநிதி பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறகணிப்பு செய்தனர்.
மேலும் அவர்கள் மாமன்றம் கூட்டம் நடைபெறும் இடத்தின் வெளியே நின்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.