பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,800 கன அடியாக அதிகரிப்புநம்பியூர் அருகே கசிவுநீர் உடைப்பு சரிசெய்யும் பணி தீவிரம்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நம்பியூர் அருகே கசிவுநீர் உடைப்பு சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நம்பியூர் அருகே கசிவுநீர் உடைப்பு சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி காலை 11 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த 20-ந் தேதி இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை 4 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,350 கன அடி திறந்து விடப்பட்டது.
அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இது நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 81.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 683 கன அடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 850 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
கசிவுநீர் உடைப்பு
இந்த நிலையில் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் ஆண்டவர் மலை கீழ்பவானி வாய்க்கால் 29-வது மைல் பகுதியில் பாலத்துக்கு அடிப்பகுதியில் கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பாலத்தை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடைப்பை சரி செய்யும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நீர் கசிவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.