சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலமாக 1,800 டன் உரம் வந்தது
சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலமாக 1,800 டன் உரம் வந்தது.
சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,500 டன் யூரியா, 300 டன் காம்ப்ளக்ஸ் உரம் சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 991 டன் யூரியா உரம், 1,723 டன் டி.ஏ.பி உரம், 1,264 டன் பொட்டாஷ் உரம், 10 ஆயிரத்து 192 டன் காம்ப்ளக்ஸ் உரம், 867 டன் சூப்பர் பாஸ்பேட் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தட்டுப்பாடின்றி உரம் வினியோகம் செய்வதற்காக போதுமான இருப்பு உள்ளது.
உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உர வினியோகம் தொடர்பாக குறைகள் இருந்தால், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம்.
இவ்வாறு இணை இயக்குனர் சின்னசாமி கூறினார்.