எடப்பாடியில் இருந்துஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் பழனி வந்தனர்:சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு
எடப்பாடியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் பழனி வந்தனர். அவர்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.
எடப்பாடி பக்தர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுக்கள் சார்பில், தைப்பூச திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகப்பெருமானுக்கு படைத்து தரிசனம் செய்வது வழக்கம்.
இவர்களில் அன்னதான குழு, அலங்கார குழு, காவடிக்குழு, பஞ்சாமிர்த குழு என பல குழுக்கள் உள்ளன. இந்த ஆண்டு பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி எடப்பாடி பக்தர்கள் குழுவினர் கடந்த 7-ந்தேதி எடப்பாடி பகுதியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர். இதில் பஞ்சாமிர்த குழுவினர் கடந்த 9-ந்தேதி பழனிக்கு வந்தனர்.
15 டன் பஞ்சாமிர்தம்
பின்னர் அவர்கள் பழனி மலைக்கோவில் மற்றும் அடிவார பகுதியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். இதற்கிடையே எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை மானூர் சண்முகநதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் மகா பூஜை நடத்தி வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 11 மணி அளவில் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தனர்.
பழனி கோவில் நிர்வாகம் சார்பில் மேள, தாளம் முழங்க எடப்பாடி காவடிக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் காவடிகளுடன் வலம் வந்து பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதிவீதி வழியாக பழனி மலைக்கோவிலை அடைந்தனர். பின்னர் அவர்கள் சாயரட்சை கட்டளை பூஜை, ராக்கால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூக்களால் ஓவியம்
அதையடுத்து எடப்பாடி குழுவினர் தயாரித்த பஞ்சாமிர்தம் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் குழுவினருக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் எடப்பாடி பக்தர்கள், பூக்களால் 'ஓம்' வடிவில் ஓவியம் வரைந்தனர்.
இந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து மலைக்கோவிலில் எடப்பாடி பக்தர்கள் குழுவினர் நேற்று இரவு முழுவதும் தங்கி இருந்தனர். பழனி மலைக்கோவிலில் இரவு தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.