கன்னியாகுமரியில் இருந்து பள்ளி மாணவியை ஓசூருக்கு கடத்திய தொழிலாளி கைது
கன்னியாகுமரியில் இருந்து பள்ளி மாணவியை ஓசூருக்கு கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து பள்ளி மாணவியை ஓசூருக்கு கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
2 குழந்தைகளின் தந்தை
சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டேயன் (வயது 36), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மார்க்கண்டேயனுக்கும் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு மார்க்கண்டேயன் அந்த மாணவியை அழைத்துக் கொண்டு தலைமறைவானார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் ெகாடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவியை மீட்டு மணிகண்டனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலையானார். இது தொடர்பான வழக்கு தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது.
மீண்டும் கடத்தல்
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மார்க்கண்டேயன் மீண்டும் அந்த சிறுமியை கடத்திச் சென்று இருப்பது தெரிய வந்தது.
எனவே போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் மாணவியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மார்க்கண்டேயன் ஓசூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மகளிர் போலீசார் ஓசூருக்கு விரைந்து சென்றனர்.
மாணவியை மீட்டனர்
அங்கு வாடகை வீட்டில் மார்க்கண்டேயனுடன் தங்கி இருந்த மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் மார்க்கண்டேயனை கைது செய்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.