கேரளாவில் இருந்துஇறைச்சி கழிவுகளை கொண்டு வந்த 2 பேர் கைது:ஆட்டோ பறிமுதல்
கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை கொண்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து தமிழக பகுதியில் கொட்டுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு கம்பம்மெட்டு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோ ஒன்று வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் 2 பேர் சாக்கு பைகள், பிளாஸ்டிக் பேரல்களை வைத்திருந்தனர். அதை சோதனை செய்தபோது கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோழி இறைச்சி கழிவு மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆட்டோவில் வந்தவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பகுதியைச் சேர்ந்த மணி (வயது 53), உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்த பரமன் (55) என்பது தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் இருந்து செல்லும் கோழிகளை கேரளாவில் விற்பனை செய்வதும், அதன் கழிவுகளை கேரளாவில் கொட்டுவதற்கு அனுமதியில்லாததால் தமிழகத்தில் கொட்டுவதற்காக வந்ததும் தெரிந்தது. இதையடுத்து கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப்பதிந்து மணி, பரமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.