மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறி மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறி மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக் குழு தலைவி காமாட்சி மூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய ஆணையர் அன்பரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அலுவலர் செல்வம் தீர்மானங்களை வாசித்தார்.
அதில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.10.50 லட்சம் செலவில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ள 13 பள்ளிகளில் சத்துணவு கூடங்கள் சீரமைப்பது, பட்டமங்கலம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இரு சாலைகள் என ரூ.26 லட்சம் செலவில் மேற்கொள்வது என்ற தீர்மானத்தை படித்தார். அப்போது உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல்நாள்தான் தீர்மான நகல்....
உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் பள்ளி சத்துணவு கூடங்களை சீரமைத்து விட்டு பின்னர் தீர்மானம் நிறைவேற்றுவது ஏன்? ஒரே ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பில் பணி மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? என்று ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மோகன், காமராஜ், முருகமணி, கபிலர் ஆகிய தி.மு.க. உறுப்பினர்களும் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் வடவீரபாண்டியன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் பேசுகையில், ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஒன்றிய அலுவலர்கள் உரிய மரியாதை அளிப்பது கிடையாது. கூட்டம் நடத்துவதற்கு முதல்நாள் தான் தீர்மான நகலையே வழங்குகின்றனர்.
வெளிநடப்பு
ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விவரத்தை தெரிவிக்காமல் பணியை முடித்துவிட்டு உறுப்பினர்களிடம் கையெழுத்து மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? எனவே இந்த அவையில் இருந்து வெளியேறுகிறேன் என்றார்.
அவரைத் தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் தொடங்கிய 20 நிமிடத்திலேயே நின்று போனது. இதன் காரணமாக அந்த வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.