ஸ்ரீவைகுண்டத்தில்தாமிரபரணி ஆற்று பாலத்திலிருந்து குதித்த வாலிபர் சாவு


தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

ஸ்ரீவைகுண்டத்தில்தாமிரபரணி ஆற்று பாலத்திலிருந்து குதித்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து திடீரென்று குதித்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார். சிகிச்சைக்காக சகோதரருடன் மருத்துவமனைக்கு சென்ற வழியில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

வாலிபர்

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெருங்குளம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சங்கர் (வயது33). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வீட்டிலிருந்து அவரது சகோதரர் கண்ணன் நெல்லையிலுள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று ெகாண்டிருந்தார்.

தாமிரபரணி ஆற்றில் குதித்தார்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கண்ணனிடம் சங்கர் கூறியுள்ளார்.

அவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அதிலிருந்து இறங்கிய சங்கர் திடீரென ஆற்றுப்பாலத்தில் இருந்து தாமிபரணி ஆற்றுக்குள் குதித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக நிலைய அலுவலர் இசக்கி, போக்குவரத்து பிரிவு அலுவலர் முத்துக்குமார், சிறப்பு நிலைய அலுவலர் ஜேசுபால்ஞானதுரை தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சாவு

ஆற்றுக்குள் தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில் கிடந்த சங்கரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து வாலிபர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story