படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்த மீனவர் மாயம்


படகிலிருந்து கடலுக்குள்  தவறி விழுந்த மீனவர் மாயம்
x

தருவைகுளம் அருகே படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்த மீனவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

தருவைகுளம் அருகே மீன்பிடிக்க சென்று விட்டு திரும்பியபோது படகிலிருந்து கடலுக்குள் தவறிவிழுந்த மீனவர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மீனவர்

விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி மகன் எமில் லாரன்ஸ் வயது36). மீனவர். இவரது மனைவி மரிய புஷ்பம். இவர்களுக்கு ரேச்சல், லியான் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

எமில் லாரன்ஸ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களாக தருவைக்குளத்தைச் சேர்ந்த தனபால் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தருவைக்குளம் கடற்கரையிலிருந்து கடந்த 4-ந் தேதி சக மீனவர்கள் 11 பேருடன் கேரள மாநிலம் கொச்சின் கடற்கரை பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்துவிட்டு தருவைக்குளம் கடற்கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.

தவறிவிழுந்து மாயம்

தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 260 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, படகில் இருந்து எமில் லாரன்ஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துள்ளார். சகமீனவர்கள் நீண்டநேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொச்சின் கடற்கரை போலீசார், எமில் லாரன்சை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சூரங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் தவறி விழுந்த மீனவர் மாயமான சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story