தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குகனிமவள கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்க வேண்டும்:சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவள கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக மாநில கனிமவளத்துறை அதிகாரிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக சிறப்பு தனிப்படையினர் கொண்ட குழு கடந்த 4-ந் தேதி முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு தனிப்படையில் கனிம வளத்துறை துணை இயக்குனர் தலைமையில், 2 உதவி புவியியலாளர்கள் உள்ளனர். தற்போது இந்த குழுவினர் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அனுமதி சீட்டு இல்லாமல் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகளை பறிமுதல் செய்து லாரி டிரைவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், குமுளி உள்ளிட்ட 3 எல்லைப் பகுதிகள் இருந்தும் சிறப்பு தனிப்படை குழு அமைக்கவில்லை. இதனால் நாள்தோறும் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதுகுறித்து மாநில கனிமவளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தேனி மாவட்டத்தில் சிறப்பு தனிப்படை குழுவை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.