தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் பீடி இலைகளை கடத்திய கும்பல் கடலில் குதித்து தப்பி ஓட்டம்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் பீடி இலைகளை கடத்திய கும்பல் கடலில் குதித்து தப்பி ஓடிவிட்டது.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் பீடி இலைகளை கடத்திய கும்பல் போலீசாரை கண்டதும் கடலுக்குள் குதித்து நீந்தி தப்பி சென்றனர். அதே பகுதியில் மற்றொரு கும்பலிடம் இருந்து வேனில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 200 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பீடி இலைகள் கடத்தல்
தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பாதுகாப்புக்குழும போலீசார், கியூ பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கும்பல் கடற்கரையில் இருந்து ஒரு படகில் பீடி இலைகள் கொண்ட மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்கும்பலை கியூபிரிவு போலீசார் சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் படகில் பீடி இலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடல் வழியாக தப்பியது. அங்கிருந்த மேலும் சிலரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்கள் திடீரென்று கடலுக்குள் குதித்து நீந்தி தப்பி சென்று விட்டனர்.
வேனில் பீடி இலைகள்
இதற்கிடையே அதே பகுதியில் சிறிது நேரம் கழித்து போலீசார் மீண்டும் ரோந்து சென்று உள்ளனர். அப்போது கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் வேகமாக கடலுக்குள் சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் கடற்கரையை நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனையிட முயன்றனர். போலீசாரைக் கண்டதும் டிரைவர் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து கியூபிரிவு போலீசார் வேனை சோதனையிட்டபோது 40 மூட்டைகளில் ஆயிரத்து 200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.
இதையடுத்து போலீசார் பீடி இலைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பீடி இலைகள் சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடத்தல்காரர்கள் பீடி இலையுடன் கடலில் குதித்து தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது. இது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.