தூத்துக்குடியில் இருந்துஇலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை


தூத்துக்குடியில் இருந்துஇலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 2 மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார்.

இது குறித்து அவர் வ.உ.சி. துறைமுகத்தில் வைத்து நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

சுற்றுலா கப்பல்கள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு இது முக்கியமான நாள். இங்கு சுற்றுலா பயணிகளுடன் பயணிகள் கப்பல் வந்து உள்ளது. இந்த சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்காக செல்கின்னர். இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். குடியுரிமை பிரிவு, சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தூத்துக்குடிக்கு வந்த அனைத்து சுற்றுலா பயணிகளையும் வரவேற்கிறோம். இதே போன்று பல சுற்றுலா கப்பல்கள் தூத்துக்குடிக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நம் மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பொருளாதார பலன்கள் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இலங்கை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒரு பயணிகள் முனையம் மேம்படுத்தப்பட உள்ளது. கொரோனா காலத்தில் சமுத்திரசேது திட்டத்தின் கீழ் மாலத்தீவு, ஈரான், கொழும்பு ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அப்போது தூத்துக்குடி துறைமுகத்துக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அப்போது தற்காலிகமாக ஒரு முனையம் தயார் செய்து இருந்தோம். தற்போது அந்த முனையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் 2 மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா காலத்தில் சில தொய்வுகள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் கப்பல் வந்து இருப்பது ஒரு ஆரம்பம்தான். தொடர்ந்து பல கப்பல்கள் தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார். பேட்டியின் போது வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, குடியுரிமை துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சுங்கத்துறை துணை ஆணையர் சித்தார்த்தன், துறைமுக சுகாதார அலுவலர் பூர்னிமா, துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், துணை வனபாதுகாவலர் பிரவீன்குமார் சிங், தலைமை என்ஜினீயர் ரவிக்குமார், தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் சுரேஷ்பாபு, செயலாளர் கிரிராஜ் சிங் ரத்தோடு ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story