தூத்துக்குடியில் இருந்துஇலங்கைக்கு படகில் கடத்த முயன்ற550 லிட்டர் பெட்ரோல் சிக்கியது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 550 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 550 லிட்டர் பெட்ரோல் சிக்கியது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
தீவிர கண்காணிப்பு
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து சிலர் படகுகளில் இலங்கைக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோன்று கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், பீடி இலை உள்ளிட்டவற்றையும் கடத்தி செல்கின்றனர். இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர், உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகில் பெட்ரோல் கேன்கள்
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு பெட்ரோல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தூத்துக்குடி நகர தனிப்படை போலீஸ் ஏட்டுகள் மாணிக்கராஜ், முத்துப்பாண்டி, முத்துராஜ், திருமணிராஜன், மகாலிங்கம், செந்தில், சண்முகராஜா ஆகியோர் திரேஸ்புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கடற்கரை ஓரமாக நின்ற ஒரு படகில் 2 பேர் பெட்ரோல் கேன்களை ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதனை பார்த்த தனிப்படை போலீசார், அந்த 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 33) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.
சுங்கத்துறையிடம் ஒப்படைப்பு
தொடர்ந்து போலீசார் அந்த படகில் சோதனை செய்தபோது, அதில் 11 கேன்களில் தலா 50 லிட்டர் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. படகில் இருந்த மொத்தம் 550 லிட்டர் பெட்ரோலையும் போலீசார் பறிமுதல் செய்து, வடபாகம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலும் பிடிபட்ட ஜெயக்குமாரிடமும் விசாரித்தனர். இதில் இலங்கைக்கு பெட்ரோல் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் ஜெயக்குமாரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.