தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள் சிக்கியது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை கடலில் வீசி விட்டு தப்பிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை கடலில் வீசி விட்டு தப்பிய கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கண்காணிப்பு
தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல் படை மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இலங்கைக்கு சீனாவின் உளவு கப்பல் வந்து இருப்பதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர காவல்படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் முருகேசன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை வெள்ளப்பட்டி கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பீடி இலைகள்
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு படகில் சிலர் வெள்ளை சாக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்த உடன் படகில் இருந்தவர்கள், அதில் ஏற்றி வைத்து இருந்த மூட்டைகளை கடலில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனை தொடர்ந்து கடலில் மிதந்த 28 மூட்டைகளை போலீசார் மீட்டு எடுத்து பார்த்தனர். அந்த மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 500 கிலோ பீடி இலைகள் இருந்தன.
இந்த பீடி இலைகளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.