வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே 58-ம் கால்வாய் உள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 58 கிராமங்களை சென்றடையும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டியதும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். இதற்கிடையே அணை நிரம்பியதால் தற்போது உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஆற்றின் வழியாக சென்று வீணாக கடலில் கலக்கிறது.
ஆனால் 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளனர். 58-ம் கால்வாயில் அதிகபட்சமாக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்க முடியும். தற்போது வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடிக்கும் மேலாக உபரிநீர் வெளியேறும் நிலையில் 58-ம் கால்வாயிலும் குறைந்த அளவு தண்ணீராவது திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.