17 அரசு உறைவிட பள்ளிகளில் மூலிகை, காய்கறி, பழ வகைகள் தோட்டம்


17 அரசு உறைவிட பள்ளிகளில் மூலிகை, காய்கறி, பழ வகைகள் தோட்டம்
x

தோட்டக்கலைத்துறை சார்பில் 17 அரசு உறைவிட பள்ளிகளில் மூலிகை, காய்கறி, பழ வகைகள் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிப்பது குறித்து மாணவிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்

தோட்டக்கலைத்துறை சார்பில் 17 அரசு உறைவிட பள்ளிகளில் மூலிகை, காய்கறி, பழ வகைகள் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிப்பது குறித்து மாணவிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

உண்டு உறைவிட பள்ளிகள்

சேலம் மாவட்டம் அறுநூற்றுமலை, கெங்கவல்லி ஓடக்காட்டுப்புதுார், முயல்காடு, கொளத்துார், பாலமலை, ராமன்பட்டி, கல்வராயன்மலை கருமந்துறை, பகுடுப்பட்டு, தேக்கம்பட்டு, குன்னுார், புழுதிக்குட்டை வெள்ளிகவுண்டனூர், பெரியகுட்டிமடுவு, பனமரத்துப்பட்டி கோணமடுவு, செம்மநத்தம், கொம்புத்துாக்கி, கும்பிபாடி, வேப்படி ஆகிய 17 இடங்களில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளியில் தங்கி படிக்கும் மலைவாழ் பழங்குடியின மாணவ- மாணவிகளுக்கு சத்தான சரிவிகித ஊட்டச்சத்து உணவு வழங்கும் நோக்கில், பள்ளி வளாகத்திலேயே இயற்கை முறையில் மூலிகை, பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்து வழங்கிட சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தோட்டக்கலைத்துறைக்கு உத்தரவிட்டார். அதற்காக 17 பள்ளிகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கினார்.

தோட்டம் அமைக்கும் பணி

தொடர்ந்து சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி, இந்த பள்ளிகளில் தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் உதவி இயக்குனர் கலைவாணி தலைமையில் உதவி அலுவலர்கள் காசி.விஜயகுமார், அருள்செல்வம், அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுநூற்றுமலை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மூலிகை பழங்கள் மற்றும் காய்கறிகள் தோட்டம் அமைத்துள்ளனர்.

இந்த தோட்டத்தில், தக்காளி, முட்டைக்கோஸ், காலிபிளவர், முருங்கை உள்ளிட்ட காய்கறிகள், கீரைகளும், கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, துாதுவளை, வல்லாரை, நொச்சி, வெற்றிலை, மனோரஞ்சிதம், புண்னை, பவளமல்லி ஆகிய மூலிகைகளும், மா, பலா, கொய்யா உள்ளிட்ட பழ வகை மரங்கள் உள்ளிட்ட 100 வகையான செடிகள் நடவு செய்யப்பட்டு புதுமையான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு

தோட்டத்தை பராமரிப்பதற்கு தேவையான, கடப்பாரை, மண்வெட்டி, கத்தரிக்கோல், தட்டு, தண்ணீர் பூவாளி. நீர்பாய்ச்சும் குழாய் உள்ளிட்ட தளவாட பொருட்களும் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்த புதுமையான பயனுள்ள தோட்டம் அமைப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மாணவ, மாணவியருக்கு செயல்விளக்க பயற்சியும் அளிக்கப்பட்டது.

பள்ளியில் மூலிகை காய் கறிதோட்டம் அமைக்க வழிவகை செய்த மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story