தர்மபுரியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு தர்மபுரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மூட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை
சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு தர்மபுரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மூட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஆயுத பூஜை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான சரஸ்வதி, ஆயுத பூஜை வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் பொரி, பழங்கள் வைத்து படையலிட்டு வழிபடுவது வழக்கமாகும். பல்வேறு மாவட்டங்களில் பொரி தயாரிக்கப்பட்டாலும் தர்மபுரி பகுதியில் தயாரிக்கப்படும் பொரிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆண்டுதோறும் பொரி தயாரிக்கும் பணி நடைபெற்றாலும் தற்போது விழாக்காலம் என்பதால் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரியில் இருந்து ஏ.கொல்லஅள்ளி செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொரி தயாரிக்கும் பணி குடிசை தொழிலாக நடந்து வந்தது. இந்த தொழில் நசுங்கி தற்போது 7 இடங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் அடுப்பின் மூலம் மனிதர்களே பொரி தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது எந்திரம் மூலம் பொரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்சார தட்டுபாடு, மூலப்பொருட்கள் விலை உயர்வால் பொரி தயாரிக்கும் பணி சற்று தொய்வு ஏற்பட்டது.
பணி தீவிரம்
விழாக்காலம் நெருங்கி விட்டதால் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொரி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கர்நாடக 64 ரக நெல் ஒரு கிலோ ரூ.25-க்கும், ஒரு கிலோ அரிசி ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி பகுதியில் ஒரு சிலர் கர்நாடகாவில் இருந்து நெல்லை வாங்கி வந்து அதனை ஊறவைத்து அரிசி ஆக்கி அதன் மூலம் பொரி தயாரிக்கிறார்கள். மற்றவர்கள் நேரடியாக அரிசியை வாங்கி வந்து பதப்படுத்தி பொரி தயாரிக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
பண்டிகை காலம் என்பதால் சுழற்சி முறையில் ஏராளமான தொழிலாளர்கள் பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மூட்டை பொரி உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு பொரி மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடனுதவி
மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு காரணமாக 50 படி கொண்ட ஒரு பொரி மூட்டை ரூ.480 முதல் ரூ.500 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரையாக ஒரு படி பொரி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொரி விற்பனை மற்றும் தயாரிக்கும் பணி படுஜோராக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பொரி உற்பத்தியாளர் கூறுகையில், காலம் காலமாக நாங்கள் பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மின்சார தட்டுப்பாடு, மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இந்த தொழிலை நடத்தவே முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பொரி தயாரிக்கும் பணி மற்றும் விற்பனை மந்தமாக இருந்தது. இந்த ஆண்டு தொற்று குறைந்துள்ள நிலையில் பொரி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு ஏற்றவாறு பொரி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த தொழிலில் உற்பத்தி செலவு அதிகரித்து லாபம் குறைந்துவிட்டது. இருப்பினும் இந்த தொழிலை தொடர்ந்து நடத்தி வருகிறோம். எங்கள் தொழிலை பாதுகாக்க அரசு போதுமான கடன் உதவிகளை வழங்க வேண்டும் என்று கூறினார்.