பெங்களூருவில் முழு அடைப்பு:கர்நாடகாவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லைசோதனைச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


பெங்களூருவில் முழு அடைப்பு:காரணமாக கர்நாடகாவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை சோதனைச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஈரோடு

பெங்களூருவில் முழு அடைப்பு எதிரொலியால் கர்நாடகாவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முழு அடைப்பு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ந் தேதி மண்டியா முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைெபற்றது.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி தமிழக- கர்நாடக மாநில எல்லை பகுதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.

பஸ்கள் இயக்கப்படவில்லை

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளோகால், சாம்ராஜ் நகர், மைசூரு, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முழு அடைப்பு காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக பகுதிகளுக்கு தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை.

ஆனால் இந்த பஸ்கள் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி வரை சென்று திரும்பின. எனினும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதன்காரணமாக சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் பஸ் நிறுத்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி தாளவாடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டன.

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக இயக்கப்பட்டு வந்த கர்நாடக மாநில அரசு பஸ்கள் அனைத்தும் நேற்று வரவில்லை. மேலும் சரக்கு வாகனங்களும் வரவில்லை. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம், பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாளவாடி

முழு அடைப்பு காரணமாக சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு அனைத்து வாகனங்களும் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக செல்லாமல் தலமலை வழியாக சென்றன. மேலும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை.

ஆனால் கர்நாடக அரசு பஸ்கள் சாம்ராஜ் நகருக்கும், தாளவாடிக்கும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டதால் தாளவாடி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தாளவாடியை அடுத்த தமிழக கர்நாடக எல்லை பகுதியான கும்டாபுரம், ராமாபுரம், பாரதிபுரம், ஓசூர், அருள்வாடி எத்திக்கட்டை, காரப்பள்ளம், போன்ற பகுதிகளில் தாளவாடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தையும் கர்நாடக மாநில பகுதிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிப்பட்டனர்.

அந்தியூர்

ஈரோடு, அம்மாபேட்டை, அந்தியூர் பகுதிகளில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக செல்ல முயன்ற அனைத்து வாகனங்களையும், அந்தியூர் சோதனைச்சாவடி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

அதுட்டுமின்றி தமிழ்நாடு- கர்நாடக எல்லை பகுதியில் உள்ள கர்காகண்டி நால்ரோடு பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story