வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் மோகன் வேண்டுகோள்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1.8.2022 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணை இணையதளம் வாயிலாகவும், வாக்காளர் உதவி செயலி வாயிலாகவும் பதிவேற்றம் செய்திடலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை தாக்கல் செய்து கொள்ளலாம். இப்பணிக்காக 4.9.2022 முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.
முழு ஒத்துழைப்பு
மேலும் புதிய மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்களை சேர்த்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு பூர்த்தியானவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வந்த நிலையினை மாற்றி ஜனவரி- 1, ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய 4 தேதிகளையும் அடிப்படையாக கொண்டு வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்த்திடும் வகையில் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட நாட்களில் தகுதி உடையவர்கள், வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்ந்திட வேண்டும். 1.1.2023 நாளை அடிப்படையாக கொண்டு சிறப்பு சுருக்கத்திருத்தப்பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்திடும் வகையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் தனி தாசில்தார் செந்தில் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், நகரமன்ற கவுன்சிலர் வக்கீல் ராதிகா செந்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ராஜ்குமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், சவுரிராஜன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.