பேராசிரியர் க.அன்பழகனுக்கு முழு உருவச் சிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


பேராசிரியர் க.அன்பழகனுக்கு முழு உருவச் சிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகம், டி.பி.ஐ. வளாகம் என்ற பெயரில் இருந்தது. இந்த வளாகத்துக்கு, மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளரும், அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்பட்டது. கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 19-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என்று பெயர் சூட்டினார்.

அதோடு மட்டுமல்லாமல், பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு வளைவு மற்றும் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டையும் திறந்து வைத்தார். மேலும், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், அன்பழகனுக்கு உருவச்சிலையும் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். அதன்படி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக கட்டிடத்துக்கு நேர் எதிரில் முழு உருவச்சிலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

அந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், பேராசிரியர் அன்பழகன் உருவச்சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, பேராசிரியர் க.அன்பழகனின் சிலையை திறந்து வைத்தார்.

இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, வெற்றி அழகன் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி வரவேற்றனர். சிலையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலை அருகில் நின்று பேராசிரியர் க.அன்பழகன் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

உறுதி ஏற்கிறோம்

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்டு 10-ந்தேதி ஆதிக்க இந்திக்கு எதிராக 1948-ம் ஆண்டு மொழிப் போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் 2-வது மொழி போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகியுள்ளது. இனமானம் காக்கவும், மொழி உரிமையை நிலநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமான பேராசிரியரின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவருடைய பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று (நேற்று) திறந்து வைத்தேன்.

பேராசிரியர் பெருந்தகையின் சிலை அமைக்க பொருத்தமான இடமும், பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது. கல்வியில், பகுத்தறிவில், சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டை கட்டி எழுப்ப பேராசிரியர் பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story