ரேஷன் கடை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்


ரேஷன் கடை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்
x

தூத்துக்குடியில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம் நேற்று தொடங்கியது.

பரிசோதனை

கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையானர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவச முழு உடல் பரிசோதனை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 483 விற்பனையாளர்கள் மற்றும் 63 கட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முதல் கட்டமாக கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இலவச முழுஉடல் பரிசோதனை முகாம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. முகாமில் கோவில்பட்டி வட்டாரத்தில் பணிபுரியும் ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு இலவச முழுஉடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில், துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்) கு.பா.மாரியப்பன், பொதுவிநியோகத் திட்ட கண்காணிப்பாளர் ஜோசில்வஸ்டர், மாவட்ட தலைமை அரசுமருத்துவமனை கண்காணிப்பாளர் ஏ.கமலவாசன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆஸ்பத்திரிகள்

மேலும் தூத்துக்குடி வட்டாரத்தில் பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஸ்ரீவைகுண்டம், கருங்குளத்தை சேர்ந்தவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியிலும், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரியில் உள்ள பணியாளர்களுக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும், உடன்குடி வட்டார பணியாளர்களுக்கு காலன்குடியிருப்பு அரசு ஆஸ்பத்திரியிலும், சாத்தான்குளம் பணியாளர்களுக்கு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியிலும், விளாத்திகுளம், புதூர் பணியாளர்களுக்கு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியிலும், ஓட்டப்பிடாரம் பணியாளர்களுக்கு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியிலும் ஆண்டுக்கு ஒருமுறை இலவச முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது ஊழியர்கள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் செல்லுமாறு கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story