விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் தொடர் சுரங்க சூளை திறக்க முழு ஆதரவு
விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் தொடர் சுரங்க சூளை திறக்க முழு ஆதரவு அளிப்பது என விருத்தாசலத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் தொடர் சுரங்க சூளை திறப்பது சம்பந்தமாக, அரசியல் கட்சிகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரஞ்சித் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன், பா.ம.க. நகர செயலாளர் விஜயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் சேகர், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தற்போது அரசுத்துறை நிறுவனமான சிட்கோ வசம் செராமிக் தொழிற்சாலை உள்ளது. சிட்கோ நிர்வாகம் தொடர் சுரங்க சூளை மற்றும் பீங்கான் சேவை மையத்தை மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர் சுரங்க சூளையையும், பீங்கான் சேவை மையத்தையும் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தகுதியான ஒரு கிளஸ்டர் மூலம் திறக்கும் சிட்கோவின் முடிவினை வரவேற்பது, விருத்தாசலத்தின் அடையாளமான மக்களின் வாழ்வாதாரத்தை பெற்று தரும் இந்த திட்டத்தை நிறைவேற்ற சிட்கோவிற்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் இந்த புதிய கிளஸ்டர் அமைப்பிற்கும் ஒட்டுமொத்த முழு ஆதரவை அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பீங்கான் தொழில்துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.