கூட்ட நெரிசலை தவிர்க்க முழுநேர ரேஷன்கடை


கூட்ட நெரிசலை தவிர்க்க முழுநேர ரேஷன்கடை
x

செம்பனார்கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க முழுநேர ரேஷன்கடை அமைக்க மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்;

செம்பனார்கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க முழுநேர ரேஷன்கடை அமைக்க மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

ரேஷன் கடைகள்

செம்பனார்கோவில் ஊராட்சியில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடை மூலம் சுமார் 1,272 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே கடையில் ரேஷன் பொருட்கள் வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகிறார்கள். இதை தவிர்க்க இந்த அங்காடியை 2-ஆக பிரித்து செம்பனார்கோவில் திலகர் தெருவில் முழுநேர ரேஷன் கடை அமைக்க நேற்று மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

அப்போது அவர் அந்த இடத்தில் ரேஷன் கடை அமைத்தால் மக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்க வசதியாக இருக்குமா? ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க இடவசதி உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று விரைவில் முழு நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கடை மூலம் செம்பனார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு, திலகர் தெரு, சிவன்கோவில் தெரு, கடிச்சம்பாடி, ராஜாஜி தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.மேலும் அப்பகுதி மக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பனார்கோவில் ரேஷன் கடைக்கு செல்லும் நிலையும் தவிர்க்கப்படும் என கூறினார். ஆய்வின்போது தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஊராட்சி தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story