காரிமங்கலத்தில் எருது விடும் விழா
காரிமங்கலம்:
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் காரிமங்கலம் ராமசாமி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் கோணகவுண்டனூர், கெரகோடஅள்ளி, வெள்ளையன்கொட்டாவூர், கொள்ளுப்பட்டி, முருக்கம்பட்டி, மோட்டுப்பட்டி, காரிமங்கலம் மேல்வீதி உள்பட 12 பகுதிகளில் இருந்து காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, எருது விடும் விழா தொடங்கியது. இதில் நூற்றுக்கணகான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். இதையொட்டி காரிமங்கலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை 12 கிராம ஊர் கவுண்டர்கள் செய்திருந்தனர்.