தேவாலயங்களை புனரமைக்க நிதிஉதவி
நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிதிஉதவி உயர்வு
தமிழ்நாட்டில் சொந்த கட்டிங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் படி கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டு உள்ளது.
அதன்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்றவற்றிற்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இதேபோல் தேவாலய கட்டிடம் கட்டப்பட்டு 10 முதல் 15 ஆண்டு வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக நிதிஉதவி உயர்த்தப்பட்டு உள்ளது. 15 முதல் 20 ஆண்டு வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலிருப்பின் ரூ.3. லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் தலைமையிலான குழுவால் பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.