சீறி பாய்ந்த மாட்டு வண்டிகள்
அலங்காநல்லூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்தன. இதை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்தன. இதை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நேற்று காலை நடைபெற்றது. தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தன்ராஜ் ஆகியோர் இந்த போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில் சிறிய மாட்டில் 19 ஜோடிகளும், பெரிய மாட்டில் 12 ஜோடிகளும் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்தை சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் என்பவர் மாடு பரிசாக பெற்றது. சிறியமாட்டில் இரண்டு சுற்றாக பிரித்து நடத்தப்பட்டது.
பார்வையாளர்கள் உற்சாகம்
இதில் முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை அரும்பனூர், கள்ளந்திரி மாடுகள் இணைந்து பெற்றன. மேலும் மற்றொரு சுற்றில் நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை தேனி மாவட்டம் சிறப்பாறை வெண்டி முத்தையா மாடுகளும் அதே பரிசு தொகையை பெற்றது. இரண்டாம் பரிசை கல்லணை விஷ்வா ரவிச்சந்திரன் மாடுகளும் பெற்றது. பெரிய மாடு ஒன்று, சிறிய மாடு இரண்டு, ஆக மொத்தம் 3 அணிகள் கலந்து கொண்டன.
இதில் ஒவ்வொரு அணிக்கும் தலா 4 பரிசுகள் வீதம் வழங்கப்பட்டது. இதில் கேடயங்கள், அண்டா உள்ளிட்ட பரிசுகளை வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டாரங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் புதுப்பட்டி - தனிச்சியம் சாலையின் இருபுறமும் உற்சாகமாக நின்று கொண்டு கை தட்டி ஆரவாரம் செய்து பார்த்து மகிழ்ந்தனர். விழா ஏற்பாடுகளை அ.புதுப்பட்டி கிராம மரியாதைகாரர்கள், கிராம பொதுமக்கள், மாட்டு வண்டி பந்தய குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.