மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த 1-ந் தேதி வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாகவும், 2-ந் தேதி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகவும் குறைக்கப்பட்டது. தற்போது டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 435 கனஅடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 656 கனஅடியாக அதிகரித்தது. இதனிடையே அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைவிட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 118.48 அடியாக இருந்தது.