இரும்பு திருடியதை செல்போனில் வீடியோ எடுத்ததால் ஆத்திரம்: வடமாநில தொழிலாளர்களை தாக்கி கொல்ல முயற்சி 4 பேர் கைது
கடலூர் அருகே இரும்பு திருடியதை செல்போனில் வீடியோ எடுத்ததால் வடமாநில தொழிலாளர்களை தாக்கி கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரெட்டிச்சாவடி,
கடலூர் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலம் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 3 போ் நின்று கொண்டிருந்தனர்.
இதை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷாம் கோஷ் (வயது 37) என்பவர், அவர்களிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
செல்போனில் புகைப்படம்
அப்போது அவா்கள், நாங்கள் இரும்பு பொருட்கள் திருடுவதை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பியா? என்று கேட்டு அருகில் கிடந்த இரும்பு கம்பியால் ஷாம் கோஷை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அதிா்ச்சி அடைந்த அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களான சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகியோர் அவர்களை தடுக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், அந்த தொழிலாளர்களையும் இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
அந்த சமயத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர், தனது ஆதரவாளர்கள் சிலரை செல்போனில் தொடா்பு கொண்டு அங்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து 3-க்கும் மேற்பட்டோர் மோட்டாா் சைக்கிளில் அங்கு வந்து வடமாநில தொழிலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஷாம் கோஷ், சதன் கோஷ், பிஸ்வாஜ்பால் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 போ் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வடமாநில தொழிலாளர்களை கொல்ல முயன்றது கடலூர் புதுக்கடை காலனியை சேர்ந்த சிந்தனை செல்வன் (23), சதீஷ்குமார்(21), தர்மராஜ் (28), மணிவண்ணன் (27) உள்ளிட்டோர் என்பது தொியவந்தது.
இதையடுத்து சிந்தனை செல்வன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இரும்பு பொருட்கள் திருடியதை செல்போனில் புகைப்படம் எடுத்ததால் வடமாநில தொழிலாளா்களை கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.