ஜி20 பேரிடர் பாதுகாப்பு மாநாடு: சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது
ஜி20 பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் நடக்கிறது
சென்னை,
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்புக்கு 2023-ம் ஆண்டின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
கல்வி, நிதி, பொருளாதாரம், ஆரோக்கியம், வேளாண்மை, கலாசாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் திறன், எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி, பெண்கள் வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த விவாதம் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் கல்வி, நிதி, மகளிர் மாநாடு ஆகியவை ஏற்கனவே நடந்தது.
பேரிடர் பாதுகாப்பு மாநாடு
தற்போது பேரிடர் பாதுகாப்பு மாநாடு சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பேரிடர் பாதுகாப்பு தொடர்பாக ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்கின்றனர். இந்த மாநாடு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கமல் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இதுவரை நடந்த ஜி20 மாநாட்டில் பேரிடர் ஆபத்து குறைப்பு தொடர்பாக விவாதம் நடத்தப்படவில்லை. இந்த மாநாட்டில் தான் இதுகுறித்து விவாதிக்கப்படுகிறது. ஏற்கனவே குஜராத், மும்பை ஆகிய இடங்களில் நடந்த பேரிடர் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
5 தலைப்புகளில் விவாதம்
பேரிடர் பாதுகாப்பு தொடர்பாக சென்னையில் நடக்கும் இந்த மாநாடு இறுதி மாநாடு ஆகும். பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பேரிடர் பாதுகாப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீடு, பேரிடர் பாதுகாப்புக்கான கட்டமைப்பை மேம்படுத்துவது, பேரிடர் ஆபத்தை சுற்றுச்சூழல் அடிப்படையில் அணுகுவது, பேரிடர் மீட்பு அமைப்பு என 5 தலைப்புகளில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற உள்ளது இறுதி விவாதம் ஆகும். பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் மிகச்சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பேரிடரின் போது 3 கோடியே 20 லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகு தமிழகத்தில் பேரிடர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாத்துரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செய்யது அதா ஹஸ்னைன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரதமரின் முதன்மை செயலாளர்
இன்று (திங்கட்கிழமை) நடக்க உள்ள மாநாட்டில் பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா, ஐ.நா. பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி மாமி மிசுடோரி, இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமை அமைப்புகளின் துணை தலைவர் ராதித்யா ஜாதி, பிரேசில் தூதரக அதிகாரி பெட்ரோ பியாசி சோசா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இதைத்தொடர்ந்து கிண்டி நட்சத்திர ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.