சென்னையில் ஜி20 மாநாடு: 'சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்போம்'


சென்னையில் ஜி20 மாநாடு: சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்போம்
x

‘சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்போம்' என சென்னையில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் மந்திரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு கடந்த 2 நாட்கள் சென்னையில் நடந்தது.

இதையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஜி20 நாடுகள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை உருவாக்க கூட்டணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று மாலை தொடங்கியது. இந்த செயல்திட்ட கூட்டணியை மத்திய அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மந்திரி பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாக்க தொழில்துறையுடன் இணைந்து உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, அறிவு பரிமாற்றம் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்த கூட்டணி முக்கிய பங்கு வகித்து செயல்படும்.

39 தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த கூட்டணியில் சேர்ந்து செயல்பட ஒத்துக்கொண்டு உள்ளனர்.

முக்கிய நோக்கம்

உலகளாவிய அனுபவங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழல் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தான் இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம் ஆகும்.

ஜி20 நாடுகளின் மாநாடு நிறைவடைந்த பின்பும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக இந்த கூட்டணி ஆலோசனை மேற்கொள்ளும்.

ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் இடையே பல்வேறு கட்டமாக நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த உறுதுணையாக இருந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒருங்கிணைந்து தீர்வு

இதைத்தொடர்ந்து ஜி20 நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வரும் பிரான்ஸ், கனடா, மொரிஷியஸ், இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை மந்திரிகள் பேசினர்.

அப்போது அவர்கள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும் என்றும், எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக ஒழிக்கவோ அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மறு சுழற்சி செய்யவோ உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பதாகவும், அத்தகைய முடிவுகளை பின்பற்றி செயல்பட தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தனர்.

உறுதியான முடிவுகள்

சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து உலக நாடுகளை பாதுகாக்க உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், அதற்கு ஜி20 நாடுகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என பருவநிலை மாற்றம் தொடர்பாக 28 நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் (சி.ஓ.பி.28) தலைவர் டாக்டர் சுல்தான் அல் ஜாபர், பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் நிர்வாக செயலாளர் சைமன் ஸ்டீல் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.


Next Story