காட்பாடி தொகுதிக்கு உலகம் முழுவதும் பெயர் கிடைக்கிறது


காட்பாடி தொகுதிக்கு உலகம் முழுவதும் பெயர் கிடைக்கிறது
x

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தால் காட்பாடி தொகுதிக்கு உலகம் முழுவதும் பெயர் கிடைக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலூர்

அமைச்சர் துரைமுருகன்

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தமிழகத்தில் பழுதடைந்த பள்ளிகளில் புதிய கட்டிடங்களை கட்டி கொடுக்க சுமார் ரூ.800 கோடி நிதிஒதுக்கி அதற்கான திட்டத்தை எனது தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தொடக்கப்பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்று அவர் சபதம் எடுத்துள்ளார். மாணவர்கள் ஒரு பள்ளியை பார்க்கும்போது அங்கு படிக்க வேண்டும் என்று ஆர்வம் வர வேண்டும்.

வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதனை பேரறிஞர் அண்ணாவிடமும், கலைஞர் மு.கருணாநிதியிடமும் அறிமுகப்படுதியது நான் தான். அதேபோன்று எம்.ஜி.ஆரிடமும், விசுவநாதனை நான் தான் அறிமுகப்படுத்தி னேன். அவருக்கு பெண் பார்த்ததும் நான்தான்.

விசுவநாதன் எம்.பி.யாக நிற்க வேண்டும் என்று கருணாநிதி உறுதியாக இருந்தார். அவர் அப்படி இல்லையென்றால் விசுவநாதனின் தலையெழுத்து மாறி இருக்கும். வி.ஐ.டி. பல்கலைக்கழகம் வந்திருக்காது. வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் பெயர் உலகம் முழுவதும் தெரிகிறது. அதற்கு ஒரே தனிமனிதன் ஜி.விசுவநாதன் தான் காரணம். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தால் உலகம் முழுவதும் காட்பாடி தொகுதிக்கு பெயர் கிடைக்கிறது என்றார்.

2-வது முதல்-அமைச்சர்

விழாவில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு வந்த 2-வது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல் முறையாக வந்த முதல்-அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தான். அவர் 1998 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் வி.ஐ.டி.க்கு வருகை தந்தார். முதல் முறை அவர் வந்தபோது இது கல்லூரியாக இருந்தது. 2-முறையாக கருணாநிதி வருகை தந்தபோது பல்கலைக்கழகமாக இருந்தது. முதல்முறை இங்கு வந்தபோது நடந்த நிகழ்ச்சியில் பேசிய கலைஞர் கருணாநிதி, 8-வது இடத்தில் உள்ள இந்த பல்கலைக்கழகம் யாரும் எட்டாத இடத்துக்கு போகும் என்று கூறினார்.

கருணாநிதியுடன் 1958-ம் ஆண்டு முதல் சுமார் 60 ஆண்டுகள் பழக்கம். என்றைக்கும் அவரை நான் மறந்ததில்லை. என்னையும் அவர் மறந்தது இல்லை. ஒப்பற்ற தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு முதல்-அமைச்சராக நம்மிடையே வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையாக உள்ளது.

சிறப்பான திட்டங்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்காக பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்திய அளவில் தமிழகம் பொருளாதாரத்தில் 2-வது மாநிலமாக உள்ளது. மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதனை தாண்டி இந்தியாவில் பொருளாதாரத்தில் தமிழகம் முதலிடம் வர வேண்டும் என்றார்.


Next Story