ககன்யான் சோதனை ராக்கெட்டை இம்மாதம் செலுத்தும் பணிகள் தீவிரம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


ககன்யான் சோதனை ராக்கெட்டை இம்மாதம் செலுத்தும் பணிகள் தீவிரம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x

நிலவில் ரோவர், லேண்டர் விழிக்காத நிலையில், அடுத்து மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான திட்டத்துக்கான சோதனை ராக்கெட்டை இம்மாதம் செலுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து இறக்கப்பட்ட பிரக்யான் ரோவர், நிலவில் எதிர்பார்க்கப்பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. எனவே அது உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கருதப்படுகிறது. தீவிர வானிலை காரணமாக அதன் மின்னணு கருவிகள் சேதமடையவில்லை என்றால் எழுந்திருக்க முடியும்.

நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை சுமார் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. கடுமையான வானிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள நிலவு இரவுக்கு முன்னதாக லேண்டர் மற்றும் ரோவர் உறங்கவைக்கப்பட்டன. உறக்கநிலையில் இருக்கும் அவை இரண்டும் விழித்துக்கொள்ள அனைத்து தரப்பினரும் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

விஞ்ஞானிகள் தங்கள் பங்குக்கு ரோவர், லேண்டரை விழிக்கச்செய்ய பல முயற்சிகளை எடுத்தனர். ஆனால் அவை எந்த பலனையும் தரவில்லை. ரோவரும், லேண்டரும் உறக்கநிலையில் இருந்து எழுந்திருக்காததால், இஸ்ரோ தன்னுடைய அடுத்த பயணங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

ககன்யான் சோதனை ராக்கெட்

குறிப்பாக, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சோதனை ராக்கெட் `டி1'-ஐ இம்மாதம் விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. தொடர்ந்து, நெபுலாக்கள் என்று அழைக்கப்படும் வானில் தொலை உயரத்தில் உள்ள மாசு அல்லது வாயுப்பொருளின் திரள்தொகுதி காரணமாக அல்லது திரளான விண்மீன் தொகுதி காரணமாக இரவு வானில் தோன்றும் ஒளிப்பரப்பு விண்மீன், கருந்துளைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக 'எக்ஸ்போ சாட்' அல்லது எக்ஸ்ரே போலன் மீட்டர் செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.

காலநிலை செயற்கைக்கோள் இன்சாட்-3 டிஎஸ் வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வருகிற நவம்பர் அல்லது டிசம்பரில் ஏவப்படும். அதைத் தொடர்ந்து நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் அல்லது நிசார் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Next Story