பிள்ளையார்பட்டியில் இன்று கஜமுக சூரசம்ஹாரம்


பிள்ளையார்பட்டியில் இன்று கஜமுக சூரசம்ஹாரம்
x

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி 2-ம் நாள் திருவிழா முதல் 8-ம் நாள் திருவிழா வரை தினந்தோறும் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

6-ம் திருவிழாவான சனிக்கிழமை மாலை கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக இந்த விழா கோவில் வளாகத்தில் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் இந்தாண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. இதையடுத்து மாலை 4.30 மணிக்கு கோவிலின் கிழக்கு கோபுரம் முன்பு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

சூரசம்ஹாரம்

முன்னதாக விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கோவில் வீதிகளில் வலம் வந்து கோவில் முன்பு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை இரவு மயில் வாகனத்திலும், 8-ம் திருவிழா அன்று இரவு குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 30-ந்தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா அன்று காலை கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் உச்சி கால பூஜை, மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.



Next Story