ரிஷிவந்தியம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ரிஷிவந்தியம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் ஆண்டுதோறும் செங்குந்தர் சமூகத்தினர் சார்பில் கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்துக்கும், சுப்பிரமணியசுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. விழாவையொட்டி தினமும் இரவு சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) முத்தாம்பிகை கோவிலில் பச்சை போடுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிகர நிகழ்ச்சியான சூரசம்கார விழாவும், 31-ந்தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.