கந்தசஷ்டி விழா: சோலைமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்


கந்தசஷ்டி விழா: சோலைமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
x

மதுரை அருகே சோலைமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

மதுரை

அழகர்கோவில்,

மதுரை அருகே சோலைமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

திருக்கல்யாணம்

மதுரையை அடுத்த அழகர்கோவில் மலையில் உள்ள முருகனின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் ஆகும். இக்கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. இதில் தினமும் அன்னம், காமதேனு, யானை, ஆட்டு கிடாய், சப்பரம், குதிரை போன்ற வாகனங்களிலும், சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து சூரசம்ஹாரம் விழாவும் நடந்தது.

நேற்று 7-ம் நாள் விழாவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை பொருட்கள், சோலைமலை முருகன் கோவிலுக்கு மங்கள இசையுடன் வந்து சேர்ந்தது. பின்னர் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். இதைதொடர்ந்து சீர்வரிசை பொருட்கள் அங்கு ஆகமவிதிப்படி வரிசையாக வைக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேள தாள இசையுடன், வள்ளி, தெய்வானையை முருகன் மாலைகள், மாங்கல்யம் அணிவித்து மணந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு பிரசாதம், குங்குமத்துடன் சேர்ந்த மாங்கல்யம் மற்றும் திருக்கல்யாண அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அலங்காரம்

மேலும் அதே மண்டபத்தில் வித்தக விநாயகருக்கும், வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து. மகா அபிஷேகமும், திருப்பாவாடை தரிசனமும், பல்லக்கில் சாமி புறப்பாடு, ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவமும் நடந்தது.

முன்னதாக மனோரஞ்சிதம், ரோஜா, தாமரை, மல்லிகை உள்ளிட்ட பல மாலைகளால் மூலவர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, சர்வ அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்தார். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்து நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார்வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், உள்துறை, கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story