கோத்தகிரியில் பராமரிப்பு இல்லாத காந்தி மைதானம்-உரிய முறையில் சீரமைக்க விளையாட்டு வீரர்கள் கோரிக்கை


கோத்தகிரியில் பராமரிப்பு இல்லாத காந்தி மைதானம்-உரிய முறையில் சீரமைக்க விளையாட்டு வீரர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Sept 2022 12:30 AM IST (Updated: 24 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பராமரிப்பு இல்லாத காந்தி மைதானத்தை உரிய முறையில் சீரமைக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் பராமரிப்பு இல்லாத காந்தி மைதானத்தை உரிய முறையில் சீரமைக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காந்தி மைதானம்

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில், புகழ்பெற்ற காந்தி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களில் பலர் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருவதுடன், அரசு மற்றும் தனியார் துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான இந்த மைதானம் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் சுமார் 2 ஆண்டுகள் இந்த மைதானத்தில் தற்காலிக கடைகள் அவ்வப்போது அமைக்கப்பட்டதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. நோய்தொற்று குறைந்தவுடன் இந்த மைதானத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி தற்போது நூற்றுக் கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் இங்குள்ள புயல் நிவாரண கூட அரங்கில் இறகு பந்து விளையாட்டு பயிச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழுதடைந்த வேலி

ஆனால் நேரு பூங்காவை ஒட்டிய காந்தி மைதானத்தின் ஒரு பகுதியில் மைதானத்தில் இருந்து பந்து வெளியே செல்லாமல் தடுக்கவும், கால்நடைகள் மைதானத்திற்கு உள்ளே வராமல் தடுக்கவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 20 அடி உயரத்திற்கு தடுப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த தடுப்பு வேலி முழுவதும் பழுதடைந்து சரிந்து விழுந்து காணப்படுகிறது. இதனால் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போதும், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் போதும் பந்து அடிக்கடி மைதானத்தை விட்டு வெளியே சென்று வருகிறது.

வனவிலங்குகள் தொல்லை

மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்காவில் ஒரு பகுதி முறையான பராமரிப்பு இல்லாததால், அபப்குதி முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், வீரர்கள் பந்தை தேடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி புதர்மறைவில் தெரு நாய்கள், காட்டுப் பன்றிகள், காட்டெருமைகள் உள்ள வனவிலங்குகள் முகாமிட்டுள்ளதுடன், அங்கிருந்து வனவிலங்குகளும், கால்நடைகளும் மைதானத்திற்குள் புகுந்து உலா வருவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே காந்தி மைதானத்தின் ஒரு பகுதியில் பழுதடைந்துள்ள கம்பிவேலிகளை புதுப்பித்து, மைதானத்திற்குள் கால்நடைகள் வராமல் தடுக்கவும், பந்து மைதானத்தில் இருந்து வெளியே செல்லாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் முருகன் கூறியதாவது:- தற்போது காந்தி மைதானத்தில் நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போட்டிகள் நடைபெறும் போது அடிக்கடி பந்து தடுப்பு வேலியைத் தாண்டிச் சென்று விடுவதால் விளையாட்டு வீரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் தற்காலிகமாக மரக்கம்பங்களை நட்டு, தடுப்பு வேலிகளை நிமிர்த்தி அதில் பிளாஸ்டிக் வலையிடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே நிரந்தரமாக பாதுகாப்பு தடுப்பு கம்பி வேலியை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கவனம் செலுத்த முடியும்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் கால்பந்து பயிற்சியாளர் ரமேஷ்:- நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மிகப் பெரிய மைதானமாக காந்தி மைதானம் இருந்து வருகிறது. கால்பந்து விளையாட்டிற்கு புகழ்பெற்ற இந்த மைதானத்தில் மண் தரைக்கு பதிலாக புல்வெளி மைதானமாக மாற்றி அமைத்தால், சந்தோஷ் டிராபி உள்ளிட்ட பல்வேறு பெரிய அளவிலான போட்டிகளை இங்கு நடத்த முடியும். இதனால் கோத்தகிரி பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தாங்களும் விளையாட வேண்டும் என்ற உத்வேகம் கிடைப்பதுடன், இளைஞர்கள் தவறான பழக்கங்களில் இருந்து விடுபட்டு விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வாய்ப்பாக அமையும். எனவே அதிகாரிகள் மைதானத்தை மேம்படுத்தி புல்வெளி மைதானமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அச்சத்துடன் பயிற்சி

மாணவன் ஆதர்ஷ்:- கோத்தகிரி காந்தி மைதானத்தில் நான் கடந்த 2 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறேன். மைதானத்தின் ஒரு பகுதி முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பயிற்சியின் போது அடிக்கடி காட்டுப் பன்றிகள் மைதானத்திற்குள் வந்து விடுகின்றன. இதனால் அச்சத்துடன் பயிற்சி பெற வேண்டி உள்ளது. எனவே புதர் செடிகளை அகற்றி, மைதானத்தின் மற்ற பகுதிகளில் உள்ளது போல பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் கேலரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடைப்பந்து விளையாட்டு வீரர் சையது முகமது: கோத்தகிரி காந்தி மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கான்கிரீட் தரைத்தளத்துடன் சிறந்த முறையில் கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டது. தற்போது மைதானத்தின் தளத்தில் சில இடங்கள் விரிசல் விட்டு பழுதடைந்துள்ளது. எனவே தரைத் தளத்தைப் பழுது பார்த்து மாலை வேளைகளில் மின்னொளி வெளிச்சத்தில் விளையாடுவதற்கு வசதியாக மின் விளக்குகள் அமைத்து தர விளையாட்டுத் துறையினர் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

கோத்தகிரியை சேர்ந்த ராமலிங்கம்:- காந்தி மைதானத்தில் 2 பக்கத்தில் பார்வையாளர்கள் போட்டியைக் கண்டுகளிக்க கேலரி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு மேற்கூரை அமைக்கபடாததால் வெயில் மற்றும் மழை நேரங்களில் பார்வையாளர்கள் விளையாட்டைக் கண்டுகளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பார்வையாளர் மாடத்தில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விரைவில் காந்தி மைதானத்தை பராமரித்து உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பே விளையாட்டு வீரர்களின் மத்தியில் உள்ளது.



Next Story