பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கந்தூரி ஊர்வலம்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கந்தூரி ஊர்வலம்
முத்துப்பேட்டை தெற்குதெரு அரபுசாஹிப் ஆண்டவர் பள்ளிவாசல் 535-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது. முன்னதாக விழா கமிட்டியினர் முன்னிலையில் கந்தூரி ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது. ஊர்வலத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூ பல்லக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட 2ரதங்கள், மின் விளக்குகளால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் மற்றும் மேள தாளங்கள், நாட்டிய குதிரைகள் இடம்பெற்றது. ஊர்வலம் பேட்டை ரோடு, முகைதீன் பள்ளி திடல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், நியூ பஜார், பழைய பஸ் நிறுத்தம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் சென்றது. பின்னர் பெரிய கடைத்தெரு, மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக மீண்டும் பள்ளிவாசலை சென்றடைந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு மௌலுத் ஷரீப் மற்றும் துஆ ஓதப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தையொட்டி திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.