விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் குவிந்த பக்தர்கள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். 798 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். 798 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் வழிபாட்டிற்காக அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பயபக்தியுடன் விநாயகரை வழிபட்டனர்.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், பன்னீர், நெய், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேனி கணேச கந்தபெருமாள் கோவில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்பட தேனியில் உள்ள விநாயகர் கோவில்களில் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் குவிந்தனர்
போடி முந்தல் சாலையில் கொட்டகுடி ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் போடி சீனிவாச பெருமாள் கோவில், சுப்பிரமணியசாமி கோவில், கொண்டரங்கி மல்லையப்பசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் போடி சத்திரம் விநாயகர் கோவில், பால விநாயகர் கோவிலும் சாமி சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல் ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், கூடலூர், கம்பம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது கோவில்களில் குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் குருவப்ப விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, விநாயகருக்கு பல்வேறு திருமஞ்சன பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் உள்ள குடவரை விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
வழிபாடு
மேலும் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, பா.ஜ.க., இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
தேனியில் இந்து முன்னணி சார்பில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோவில் முன்பு தலைமை விநாயகர் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் இந்து எழுச்சி முன்னணி சார்பிலும், தேனி பெத்தாட்சி விநாயகர் கோவில் அருகில் தலைமை விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அங்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
சிலைகள் ஊர்வலம்
தேனி நகரில் பாரஸ்ட் ரோடு, பங்களாமேடு, சமதர்மபுரம் உள்பட பல்வேறு குடியிருப்புகளிலும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 798 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சிலைகளை வழிபாடு செய்தனர்.
இதேபோல், தேனி அருகே பூமலைக்குண்டு கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பூமலைக்குண்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.